தர்மங்களை பயனுள்ளதாக்குவோம்

தர்மங்களை பயனுள்ளதாக்குவோம்

இன்று நம்மில் பலர் தான தர்மங்களை (சதகா, சகாத்) அதிகமாக செய்கிறோம். நம்மில் பலர், மிகவும் ரகசியமாக இறைவனுக்கு பிடித்த விதமாக செய்கிறார்கள். இப்படி பலரும் செய்யும்போது இன்னொரு பக்கம், சில செல்வந்தர்களின் தான தர்மங்கள் சரியான விதத்தில் பயன்படாமலும் போய் விடுகிறது.

தான தர்மங்களை மிகவும் பயனுள்ளதாக்க எனக்கு தோன்றிய சில கருத்துக்களை பகிர்கிறேன். நாளாந்தம் நாம் செய்யும் சில்லறை உதவிகள் போல, சில உதவிகளை நிரந்தரமாக பின்வருமாறு செய்யலாம். இவ்வாறு ஒவ்வொருவரும் செய்யும்போது நம் சமுதாயத்தின் தேவையுடையோரை தூக்கி விடலாம். (இஸ்லாம் கூறிய பொது பைத்துல்மால் உண்டானால் அதன் மூலம் இதை நடை முறை படுத்தலாம், இன்ஷா அல்லாஹ். அது வரை..)
  1. இன்று படிக்க முடியாமல் பலர் கல்வியை நிறுத்தி விடுகிறார்கள். இவர்களது மாதாந்த கல்விச் செலவை ஒருவர் பொருப்பெடுக்கும்போது குறித்த நபர் கல்வியை தொடர உதவுகிறோம். உதாரணமாக SSLC படித்து முடித்த மாணவன் ஒருவனுக்கு +1 +2 முடிக்க உதவலாம்.
  2. பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் பலர் இன்று தமது செலவுகளுக்கு வழியில்லாமல் இருக்கிறார்கள். இவர்களது மாதாந்த செலவுகளுக்கு ஒருவர் உதவலாம். உதாரணமாக மாதாந்திரம் ஒரு தொகையை ஒரு குடும்பத்துக்கு கொடுக்கலாம்.  
  3. கணவனை இழந்து, குடும்பம் நடத்த போதிய வசதி இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு ஒரு தொகையை மாதாந்த கொடுக்கலாம். (மறுமணம் செய்வதும் சரியான தீர்வு). இவர்களுக்கு வீட்டிலிருந்து வருமானம் தேட தையல் மெசின் போன்றவை வாங்கிக் கொடுக்கலாம். (இன்று முஸ்லிம் பெண்கள் சிலர் விபசாரத்துக்கு தள்ளப்பட இந்த வறுமையும் காரணமாகிவிட்டது. இதற்கு நாமும் பொறுப்பு சொல்ல வேண்டும்.)
  4. மாதாந்திர மருத்துவ செலவுக்கு வழியில்லாத நோயாளிகளுக்கு மாதா மாதம் மருந்து வாங்கித்தர பொறுப்பேற்கலாம். உதாரணமாக கேன்சர், டயாபிடிஸ் போன்ற நோயாளிகளுக்கு உதவலாம். 
  5. வெளியூர்களில் மிகக் குறைந்த வருமானத்தில் வேலை பார்த்துக் கொண்டு இரண்டு வருடம் ஒரு முறை ஊர் செல்லும் வறிய சகோதரர்களுக்கு பயணத்தின் முன் அவர்கள் பயண செலவுகளுக்கு உதவலாம்.
  6. தன மகளின் திருமண செலவுகளுக்காக கஷ்டப்படும் பெற்றோர்களுக்கு, திருமண செலவில் ஒரு பகுதியை பொறுப்பேற்க முற்பட்டால் அவர்கள் பாரம் குறையும். உதாரணமாக, கொஞ்சம் நகையோ அல்லது சாப்டு செலவில் ஒரு பகுதியையோ அல்லது ஆடை, இதர செலவுகளில் ஒரு பகுதியை பொறுப்பேற்கலாம்.  
  7. அங்கவீனர்கள், அனாதைகளுக்கு மாதாந்திரம் உதவலாம்.
  8. அறுவடை நேரத்தில் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவலாம். 
  9. மருத்துவ வசதிக்கு வழியில்லாத கர்பிணிப் பெண்களுக்கு மாதாந்திர செக் அப், டிலிவரி நேரத்தில் பண உதவி செய்யலாம்.
  10. வறிய வீடுகளில் ஏற்படும் ஜனாசாக்களின் செலவுகளுக்கு உதவலாம். 
  11. பல கிராமங்களில் கஷ்டத்துக்கு மத்தியில் இயங்கும் மஸ்ஜித்கள், மதரசாக்களுக்கு மாதாந்தம் உதவலாம்.    
  12. இன்னும் பல...
சரியான உதவிகள், ஒருவரின் பாரத்தை குறைப்பதோடு அவர்களை மன உளைச்சலில் இருந்து மீட்க வேண்டும். மேலும் சமுதாய எழுச்சிக்கு உதவ வேண்டும். மாறாக பிச்சை எடுக்க தூண்டக்கூடாது. உதவி செய்பவருக்கும் பெறுபவருக்கும் மன திருப்தியை அளிக்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி செய்யப்படும் உதவிகள், அழகிய முறையில் அமைந்து அது இம்மையிலும் மறுமையிலும் பயனளிக்க கூடியதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் உதவுவானாக. ஆமீன். 

அபு அம்மாராஹ் 

No comments:

Post a Comment