ஒரு மீனின் அழு குரல்.

ஒரு மீனின் அழு குரல்.


ஒரு நாள் ஒரு சிறுவன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது திடீரென ஓர் அழு குரல். திரும்பிப் பார்த்தால், ஒரு மீன் அழுது கொண்டிருந்தது. "உனக்கு என்ன பிரச்சினை?' சிறுவன் வினவினான்.


உடனே மீன்;

"எனக்கு இந்த கடல் பிடிக்கவே இல்லை. மிகவும் பயமாக இருக்கிறது. எக்கச்சக்க எதிரிகள். எல்லோரும் என்னை சாப்பிட பார்க்கிறார்கள் தினம் தினம் செத்துப் பிழைக்கிறேன். என்னை கொஞ்சம் இங்கிருந்து தூக்கிக்கொண்டு போய் பக்கத்திலுள்ள குளத்தில் போட்டு விடு" என்றது. உடனே சிறுவனும் அவ்வாறே செய்து விட்டான்.


சிறிது நாள் கழித்து, அந்த மீனை பார்க்கத் தோன்றியது சிறுவனுக்கு. உடனே நலம் விசாரிக்க அந்த குளத்துக்கு சென்றான். இவனை கண்டதும், மீன் மீண்டும் அழத் தொடங்கியது. என்ன பிரச்சினை என்று வினவ, மீன் கூறியது;

"எனக்கு இந்த குளம் பிடிக்கவே இல்லை. மிகவும் இருட்டாக இருக்கிறது. நிறைய எதிரிகள். நான் மேலே வந்தால் பறவைகள் என்னை சாப்பிட பார்க்கிறது. என்னை கொஞ்சம் இங்கிருந்து தூக்கிக்கொண்டு போய் பக்கத்திலுள்ள கிணற்றில் போட்டு விடு" என்றது. உடனே சிறுவனும் அவ்வாறே செய்து விட்டான்.


சிறிது நாள் கழித்து சிறுவன் அந்த கிணற்றுப் பக்கமாக சென்றான். இவனை கண்டதும், மீன் மீண்டும் அழத் தொடங்கியது. என்ன பிரச்சினை என்று வினவ, மீன் கூறியது;

"எனக்கு இந்த கிணறு பிடிக்கவே இல்லை. என்னை மீண்டும் கடலிலே போடு" என்றது. உடனே சிறுவன் "ஏன் இங்குதான் உனக்கு எதிரிகள் இல்லையே. பின்னர் ஏன் கவலை?" என்றான். இங்கு மிகவும் இருட்டாகவும் தனிமையாகவும் இருக்கிறது. இந்த தனிமையே எனக்கு எதிரி என்றது அந்த மீன்.


உடனே சிறுவன், இப்போது நீயும் உன்னோடு எதிர் சிந்தனையும் வளர்ந்து விட்டது. நீ எனது சிறிய தூண்டிலில் வர மாட்டாய் அன்று கூறி திரும்பி சென்று விட்டான்.



இந்த கதையிலுள்ள மீனை போல,

நம்மில் பலருக்கு நாம் செய்யும் வேலை என்றும் திருப்தி அளிப்பதில்லை. கொஞ்ச நாள் வேலை செய்தவுடன், என் மேனேஜர் சரி இல்லை, இடம் சரி இல்லை, இந்த டிவிசனில் சாப்பாடு வசதி இல்லை. என்னோடு வேலை செய்பவர்கள் மோசமானவர்கள் என்று நாளுக்கு நாள் (குறுகிய காலத்தில் எந்த இலக்குமின்றி) வேறு கம்பனிகளுக்கு மாறுவதும், வேறு டிவிசன்களுக்கு இட மாற்றம் கேட்பதுமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். தனக்குள் எதிரியை வளர்த்துக் கொண்டு காணும் அத்தனையையும் குறை கூறுகிறார்கள். இறுதியில், பல வருடங்கள் அதே பதவியிலும், அதே சம்பளதிலும் வாழ்கையை ஓட்டுகிறார்கள். காரணம், எல்லா இடத்திலும் சில மாதங்களோ ஒரு வருடமோ தான். அவர்கள் சி வி யிலும் பெரிய கம்பனி லிஸ்ட். Interview இலும் பதில் சொல்ல முடியாத நிலை.


சரியான முறையில் திட்டமிட்டு முறையான தொழில் துறையிலும் கம்பனியிலும் நுழையுங்கள். குறிப்பிட்ட சில வருடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்யுங்கள்.

ஒரு மீனுக்கே இறைவன் பெரிய மீன், பறவைகள், மனிதன் என்று பல சவால்களை அளித்திருக்கும்போது, நிச்சயமாக நாமும் பல சவால்களை வாழ்கையில் எதிர் கொள்ளத்தான் வேண்டும். இதனை சமாளிக்க தெரியாமல், குறை கூறி ஓடுவதில் எந்த இலாபமும் இல்லை.


சிந்திப்போம்.. வாழ்வை சரியாக அமைப்போம், இன்ஷா அலலாஹ்.

Source: மேடை நிகழ்ச்சியில் கேட்டது.






No comments:

Post a Comment