இப்படியும் செய்யலாம் / உதவலாம் - பாகம் 5

இப்படியும் செய்யலாம் / உதவலாம் - பாகம் 5

வட்டியிலிருந்து மீட்போம்.. அழகிய கடன் கொடுப்போம்.
 

அண்மையில் கேட்ட ஒரு சம்பவம் என்னை மிகவும் பாதித்தது.
...
தமிழ் நாட்டில் ஒரு கிராமம், அங்கு பல ஏழைக் குடும்பங்கள். இவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்கள். இவர்களை பற்றி "ஒரு உதவி அமைப்பு" சர்வே எடுக்க சென்றுள்ளார்கள். அவர்களோடு பேசும்போது மிகவும் திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்துள்ளது. சொல்வதற்கு மன்னிக்கவும், இந்த ஊரிலுள்ள பல குழந்தைகளுக்கு தந்தை வேறாம். தமது பொருளாதார சுமைகளை கலைக்க, குடும்பப் பெண்கள், கடன் கொடுத்தவனுக்கே கற்பை விற்க வேண்டிய நிலை. இத்தனைக்கும் இவர்கள் வாங்கிய கடன்கள் இந்திய ரூபாயில் வெறும் 5000 முதல் 20,000 வரை மட்டுமே. ஆனால் வட்டி அதற்கு ஒரு குட்டி, அந்த குட்டிக்கு ஓர் குட்டி என பெரிய பூதமாக தொகை பெருக்கெடுக்க, அதை அடைக்க முடியாமல் திணறும்போது, இந்த நிலைக்கு தள்ளப் படுகிறார்கள் அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

இந்த சூழலை அறிந்த ஒரு தனவான் அந்த உதவி அமைப்பு மூலமாக அங்கு சென்று அனைவரையும் பள்ளி வளாகத்துக்கு அழைத்து, கடன் கொடுத்தவர்களையும் அழைத்து, அனைத்து கடன்களையும் தீர்த்தாராம். இதுவல்லாமல் மீண்டும் இந்த நிலைக்கு அவர்கள் செல்லாமல் இருக்க, பலருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப் பட்டதாம். மாஷா அல்லாஹ். சரியான சதகா, சக்காத்கள் நல்ல படியாக பயன்படலாம் என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

"வட்டி வாங்குவது, வட்டி கொடுப்பது, அதற்கு உதவி புரிவது, அதற்கு கணக்கு எழுதுவது என்பது மிகப் பெரிய பாவங்கள். அதே போல் வட்டியின் மிகக் குறைந்த அளவே தாயோடு விபச்சாரம் பண்ணுவதற்கு சமம் என்று நபிகளார் கூறியுள்ளார்கள்." இப்படி இருக்க, மேல் கண்ட வகையில் சிக்கித் தவிப்பவர்களை மீட்டெடுக்க, சில வேலைகள் நாம் உதவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இன்ஷா அல்லாஹ், இனி அவர்கள் வட்டியின் பக்கம் செல்லாமல் நாம் பாதுகாப்போம்.

ஒரு முறை, வெளியூரில் ஒரு பேச்சலர் ரூமில், ஒருவர் மிகவும் கவலையுடன் இருந்ததை பார்த்த நண்பர்கள், விசாரித்தபோது அவர் சுமார் 4,500 திர்ஹம் Credit Card இல் கடன் இருப்பதாகவும், இதனை முழுதாக செலுத்த முடியாமல், வீணாக வட்டியை "Late Payment Fee", Interest, Charges என்று பல பெயர்களில் மாதா மாதம் கெட்டுவதாக மிகவும் பரிதாபமாக கூறினார். இந்த 4,500 கடனை இன்னும் 6 மாதத்தில் முடிக்க சுமார் 6,000 திர்ஹம் தேவைப்படும் என்றும் கூறினார்.

ஒரு கணம் சிந்தித்த நண்பர்கள் தான் உதவுவதாக வாக்களித்து, அந்த வங்கிக்கு சென்று உண்மை நிலவரத்தை கூறியதும், அந்த வங்கி மேலதிகாரி, வட்டி இல்லாமல் பணத்தை கட்ட சொல்லியுள்ளார்கள். உடனே நண்பர்கள் 4 பேரும் ஆளுக்கு 1,000 வீதம் தருவதாகவும், அதை 4 மாதத்தில் திருப்பி தந்து விட வேண்டும், மீண்டும் Credit Card எடுக்கக் கூடாது என்ற உடன் படிக்கையில் அவற்றை செலுத்தி முடித்து விட்டனர். பணம் பெற்றவரும் நண்பர்களுக்கான இந்த கடனை 4 மாதத்தில் வட்டியின்றி திருப்பி செலுத்தி விட்டார். மாஷா அல்லாஹ், 2.000 காசும் மிச்சம். ஒருவரை வட்டியிலிருந்து மீட்கவும் முடிந்தது.

பல மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ, வட்டியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். பலர் திருந்தி வெளியே வர நினைக்கும்போது, முடியாமல் திணறுகின்றனர். இவர்களை மீட்பது நம் சமுதாயத்தின் கடமை. பலரது பெரிய கடன்கள் இன்னொருவருக்கு மிகச் சிறு தொகைகளாக இருக்கலாம். வட்டியில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு நிம்மதியும் பரகத்தும் இல்லை.இவர்களை மீட்பது நம் கடமை அல்லவா?

இது ஒரு புறம் இருக்க, மருத்துவ செலவுகள், படிப்பு செலவுகள், இன்னும் பல அத்தியாவசிய தேவைகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் வறியவர்கள் ஒரு புறம் இருக்க பல செல்வந்தர்கள், தம் பணத்தை வங்கிகளிலும், இன்னும் பிற இடங்களிலும் தேக்கி வைத்துள்ளனர். அந்த சேமிப்பில் ஒரு சிறு பகுதியை கடன் கொடுப்பதற்கு என்று ஒதுக்கலாம். "அழகிய கடன்களை" கொடுப்பதையும் அதனை அழகிய முறையில் திருப்பி வாங்குவதையும் இஸ்லாம் விரும்புகிறது. இது இவர்களுக்கு ஒரு சிறு "Cash Rotation" என்றாலும் இன்னொரு புறம் பணம் இல்லையே என்று படிப்பை நிறுத்த நினைத்த ஒருவனை படிக்க வைத்திருக்கலாம், நல்ல தருணத்தில் மருத்துவத்துக்கு பயன்பட்டிருக்கலாம், நல்ல தொழிலை தொடங்கவோ, ஒரு வீட்டை வாங்கவோ உதவி இருக்கலாம். சில திருமண உதவிகளுக்காக பயன்பட்டிருக்கலாம். அல்ஹம்துலில்லாஹ்.

ஒவ்வொரு ஊரிலும் முஹல்லாக்களின் ஒத்துழைப்போடு, செல்வந்தர்கள் இணைந்து வட்டியில்லா உதவி திட்டங்களை உருவாக்கலாம். இதன் மூலம் ஊருக்குள் முளைத்திருக்கும் வட்டிக் கடைகள், அடகுக் கடைகளை அடியோடு செயலிழக்க செய்யலாம். இன்ஷா அல்லாஹ்.

வட்டியின் அகோரம் இவ்வாறு ஒரு புறம் இருக்க, பல ஆண்களும் ஏன் பெண்களும் கூட, வட்டியின் இன்னொரு வடிவம் தெரியாமல், ஒரு மாயை வியாபாரத்தில் விழுந்து விடுகிறார்கள்.

"நாங்கள் வியாபாரம் செய்கிறோம், நீங்கள் பணம் தாருங்கள் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இலாபமாக தருகிறோம், நஷ்டம் வந்தால் நீங்கள் கவலை படத் தேவை இல்லை " என்றதும், பணம் முதலீடு செய்கிறார்கள். "வட்டியை ஹராமாக்கிய இஸ்லாம் வியாபாரத்தை ஹலாலாக்கியுள்ளது". இது உண்மையே. ஆனால் இலாபம் என்று முன் கூட்டியே குறிப்பிட்ட மாத தொகையை நிர்ணயிப்பதும், நஷ்டத்தில் பங்கெடுக்காமல் உழைப்பின்றி ஊதியம் பெறுவதும் வட்டியே. வங்கி 5%, 10% என்று தருகிறது. இவர்கள் தொகையாக நிர்ணயிக்கிறார்கள். அவ்வளவுதான். (இஸ்லாமிய வங்கி முறையோடு, இந்த நடை முறையை குழப்ப வேண்டாம்) இது பற்றிய அறிவை வழங்க வேண்டியதும் நம் கடமையே. இல்லாவிட்டால் கொடுத்தவர், எடுத்தவர் இருவர் வாழ்விலும் பரகத் போய் விடும். அல்லாஹ் பாதுகாப்பானாக.

நல்ல சிந்தனைகள் உண்டாகட்டும். நல்ல செயல் திட்டங்கள் நடைபெறட்டும், செல்வந்தர்கள் கை கை கோர்கட்டும், முஹல்லாக்கள் இணையட்டும். நிச்சயமாக நம் சமுதாயம் வட்டியின் கொடுமையிலிருந்து வெளி வரும். வட்டி கடைகள் இருந்த இடம் தெரியாமல் தூரப் போகி விடும். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் நம் சமுதாயத்தை வட்டியின் கொடுமையிலிருந்து முழுமையாக மீட்பானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்

அபூ அம்மாராஹ்

abuammaarah@yahoo.com

No comments:

Post a Comment