இப்படியும் செய்யலாம் / உதவலாம் - பாகம் 4

இப்படியும் செய்யலாம் / உதவலாம் - பாகம் 4

பயணத்தின் போது ...
(விமான நிலையத்தில் / ரயில் நிலையத்தில் / பேருந்து நிலையத்தில் ...)

பயணத்தில், கடைசி நிமிட பதட்டத்தோடு, அரக்க பறக்க என்று ஓடுவதில் பலருக்கு அலாதி பிரியம். பத்து முறை நேரத்தை பார்ப்பதும், சுற்றி இருப்பவர்களையும் சுற்றி இருப்பவற்றையும் திட்டிக் கொண்டு எதையாவது கடைசி நிமிடத்தில் தவற விட்டுவிட்டு, பஸ்ஸை, ரயிலை, விமானத்தை பிடிக்க ஓடுபவர்கள் ஏராளம். பல நேரங்களில் இதற்குக் காரணம், ஒழுங்காக திட்டமிடாமையும், "அதுதான் நேரம் இருக்கிறதே" என்ற பொடு போக்கும் தான். எது எப்படியோ, இதுவல்ல நம் தலைப்பு. மாறாக, ஒவ்வொரு பயணமும், பலருக்கு உதவுவதற்கு இறைவன் நமக்கு தரும் ஓர் அருட்கொடை என்று எண்ணுங்கள். அவ்வாறு உதவும்போது, நமக்குள் ஒரு பூரிப்பும் சந்தோசமும் ஏற்படுகிறது.

நாம் சகாத் கொடுக்க தகுதியானவர்களில் வழிப் போக்கர்கள் இருப்பதும், பயணிகளின் துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதாக இறைவன் குறிப்பிடுவதும், "பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து இறைவன் அத்தாட்சிகளை பார்க்க சொல்வதும்", பயணத்துக்கும் பயணிகளுக்கும் உள்ள தனி சிறப்பே. இந்த வேளைகளில், நமது பயணம் பாதிக்காமல், எவ்வாறெல்லாம் பிறருக்கு உதவலாம்? ஓர் அலசல்.

எல்லாவற்றிற்கும் முதன்மையாக, பயண துஆக்கள் தெரியாமல், ஓதாமல் பல பயணங்களை ஆரம்பிக்கும் நம் உறவினர்களுக்கு, அந்த துஆக்களை சொல்லிக் கொடுப்பதோடு, அதன் முக்கியத்துவத்தையும் எத்திவைப்பது, நாம் செய்யும் முதன்மையான உதவியாகும்.

விமான/ரயில் நிலையத்தில், பாஷை தெரியாமல், முகத்தில் முழுப் பயத்தோடு தனியாக பயணம் செல்ல வந்திருக்கும் முதியவர்கள் எத்தனை பேர்? குழந்தைகளை, பேரக் குழந்தைகளை பார்க்கும் ஆசையில் இருந்தாலும், விமான/ரயில் நிலையத்தில் எங்கு போவது, என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் இவர்களுக்கு ஒரு சிறு புன்னகையோடு வழி காட்டினால், எத்தனை ஆறுதல் அவர்களுக்கு. ஆனால் கடைசி நேர ஓட்டத்தில் இருக்கும் நமக்கு இதைப் பார்க்க எது நேரம்? இதற்காகவே கொஞ்சம் முன்னரே கிளம்பலாமே. இப்படிப்பட்ட உதவிகள், ஒரு நாள், நம் குடும்பத்தவர் தனிமையில் இருக்கும்போது, யார் மூலமாகவோ அவர்களுக்கு உதவி கிடைக்க வழி வகுக்கலாம்.

ஒரு நாள் நண்பரை வழி அனுப்ப சென்ற எனது நண்பர், Luggage போட்டுவிட்டு திரும்பி பார்க்கும்போது (துபாயில் வழி அனுப்புபவர் கவுன்ட்டர் வரை செல்லலாம்), பக்கத்துக்கு கவுன்டரில் ஒருவர் பதட்டத்தோடு, பாசை புரியாமல் நின்றதை கண்டார். உடனே போய் விசாரிக்கும்போது, அந்த கவுன்டரில் உள்ள பணிப்பெண், "சார் இவர் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு போக வேண்டிய விமானத்திற்கு, இன்று பகல் வந்துள்ளார், சொன்னால் இவருக்கு புரியவில்லை என்றாராம். முக்கிய குடும்ப திருமணத்துக்கு போவதற்கு நின்றவர், இப்போது டிக்கெட் பணத்தையும் தொலைத்து நிற்கிறார். நண்பர் மேலதிகமாக விசாரித்தபோது, "விமானத்தை தவற விட்டவர்களுக்கு Waiting List இல் கட்டணம் ஏதுமின்றி அடுத்த Flight இல் சில சமயம் போகலாம், குறிப்பிட்ட கவுன்டருக்கு போய் பாருங்கள்" என்றாராம். அவ்வாறே போய் அந்த நபரை அடுத்த விமானத்தில் ஏற்றி விட்டார். ஒரு சிறு விசாரிப்பு, அவர் தொலைக்க இருந்த பணத்தை சேமித்ததோடு, திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் அவருக்கு கொடுத்தது.

இன்னொரு நகைச்சுவை சம்பவம், ஒரு நீண்ட பயணத்தில் பக்கத்தில் உள்ள பெண்மணி (முதல் விமானப் பயணம்) "சாப்பாடு, டீ" என்று விமானப் பணிப்பெண் எது கேட்டாலும் இவர் எதுவும் வேண்டாம் என்றாராம். விசாரித்ததில் அவர் பசியோடு இருந்தாலும், "தன்னிடம் காசு இல்லை, அதான் வேண்டாம் என்றேன்" என்றாராம். இந்த விமானத்தில் சாப்பாடு இலவசம்தான் காசு இல்லை என்று, பணிப் பெண்ணிடம் சாப்பாடு வாங்கிக் கொடுத்ததும், அதிக சந்தோசம் அவருக்கு. இதே போல் முதல் முறை வெளிநாடு வரும் பல முதியவர்கள், விமான நிலையத்தில் அவர்களுக்கென்றே இலவசமாக வழங்கப் பட்டிருக்கும் Electric Car வசதிகள் பற்றி தெரியாமல் பல மீட்டர்கள் நடந்து வருவார்கள். இவர்களுக்கு இந்த தகவல்களை வழங்கும்போது, அவர்கள் கால் வலியை ஓரளவு குறைக்கலாம்.

சில வேலை Luggage வரும் பெல்டில் நிற்கும்போது, கர்ப்பிணிப் பெண்களும், பெண்கள் கைக்குழந்தைகளுடனும், மிகவும் தள்ளாத வயதிலுள்ள முதியவர்களும் நின்றுகொண்டு இருப்பதையும் காண்போம். அதிக சிரமம் பட்டு, தனது Luggage களை எடுப்பார்கள். பக்கத்தில் சம்பவம் நடந்தாலும் நம் பெட்டியிலேயே, கண்ணாய் இருக்கும் நமக்கு, இது கண்ணில் தெரிபடாது. Luggage எடுக்கும்போது அவர்களுக்கு கொஞ்சம் உதவி செய்து பாருங்கள், அவர்கள் முகத்தில் உண்மையான அன்பும் நன்றியும் தெரியும்.

இன்று பலருக்கு Online Cheap Ticket பற்றி தெரியாமல், அதே டிக்கெட்டை விலை கூடுதல் கொடுத்து வாங்கிறார்கள். இவர்களுக்கு சில தகவல்கள் வழங்கலாம். நண்பர்களுக்கு Luggage கெட்டிக் கொடுப்பது, பஸ்ஸில் நம் சீட்டை முதியவர்களுக்கு பெண்களுக்கு கொடுப்பது, நீண்ட பயணங்களில், பக்கத்தில் சும்மா இருந்து வருபவர்களுக்கு நல்ல புத்தகங்களை கொடுப்பது, புதிதாக ஊருக்கு/வெளிநாட்டுக்கு வருபவர்களுக்கு பஸ் நம்பர்கள்/பாதைகளை சொல்லிக் கொடுப்பது, அவ்வப்போது சொந்த காரில் பிறருக்கு லிப்ட் வழங்குவது, Change இல்லாமல் திணறும்போது Change இருந்தால் கொடுப்பது, என்று இன்னும் பல உதவிகள் செய்யலாம். ஒரு முறை பஸ்ஸில், வாட்ட சாட்டமாக கோட் அணிந்து நின்ற ஒருவருக்கு துரதிஷ்டவசமாக 2 ரூபாய் சில்லறை குறைவாக இருந்தது. கண்டக்டர் அவரை கீழே இறங்கய்யா என்று கண்ணியத்தை குறைக்க நின்ற அந்த கணம் ஒரு சிறுமி 2 ரூபாய் கொடுத்து அவர் கண்ணியத்தை காத்தாள்.

இது மட்டுமா, பல நேரங்களில் வீதிகளில் நம்மிடம் யாரும் அட்ரஸ் கேட்டால் நமக்கு பதில் சொல்ல நேரம் இருக்காது. ஆனால் ஒரு சில வினாடிகள் செலவழித்தால், அவரது பல நிமிடங்களை சேமிக்கலாம். இதை விட மோசமான செயல் சிலருக்கு அந்த அட்ரெஸ் தெரியாவிட்டாலும், தெரிந்த மாதிரி, பிழையான தகவல்களை வழங்குவது. இதற்கு சும்மா இருந்து விடுவது மேல். நண்பர் ஒருவர் கூறினார் அவர் ஒருமுறை வெளிநாடு சென்றபோது, ஒரு விடயத்தை பார்த்தாராம். நாம் அட்ரெஸ் தெரியாவிட்டால், தெரியாது என்று நடந்து கொண்டே இருப்போம். ஆனால் அங்குள்ளவர்கள், அவர்களுக்கு தெரியாவிட்டால், இன்னொருவரிடம் விசாரித்து, அவருக்கு அட்ரெஸ் தெரிந்தால் அவரை சாட்டி விட்டு செல்கிறார்களாம். என்ன ஒரு நல்ல பழக்கம்.

இங்கு கூறப்பட்டது சில வழிகள். இன்ஷா அல்லாஹ் இன்னும் பலவழிகளில் நாம் பயணத்தின் போது பிறருக்கு உதவலாம்

எல்லாம் சரிதான், இப்படி உதவும் நேரங்களில், உதவி செய்கின்றேன் என்று நினைத்து, விமான நிலையத்தில் தெரியாத பொதிகளை வாங்குவது, தெரியாத நபர்களோடு சேர்த்து Luggage போடுவது, தனிப்பட்ட விபரங்களை பரிமாறுவது, உணவுகளை ஷேர் பண்ணுவது என்று வம்பில் மாட்டி விடவும் கூடாது.

இறுதியாக ஒரு வீடு சென்று திரும்பும்போது, அங்குள்ள 2 வயது குழந்தையிடம் டா டா, பை பை என்று சொன்னபோது, அது அங்கிள் "F பீ அமானில்லாஹ்" என்று பாதுகாப்பான பயணத்துக்கு துஆ செய்தது. இதை விட, பயணிகளுக்கு செய்யும் மிகப்பெரும் உதவி ஏதும் உண்டா? நம் குழந்தைகளுக்கும் இதை சொல்லிக் கொடுக்க வேண்டும். இது போல் பலர் விடை பெறும்போது, என்னுடைய ஸலாத்தை, குறிப்பிட்டவரிடம் சொல்லி விடுங்கள் என்பார். நாம் பத்தோடு பதினொன்றாக இதை மறந்து விடுவோம். உம்ரா செல்லும்போது துஆ கேட்க சொன்னாலே பலர் மறந்து விடுவார்கள். இவற்றை நாம் அமானிதம் என உணர்ந்து அவற்றை கொண்டு சேர்க்க வேண்டும். ஒருவர் இவ்வாறு கேட்டுவிட்டு, கூறினார், எனது அமானிதம் உங்களிடம் இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் அந்த அமானிதம் சேரும் வரை நீங்கள் பாதுகாப்பில் இருப்பீர்கள் என்றார். அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ், நமது நாளாந்த வாழ்விலும் பயணங்களிலும் இவ்வாறு பல உதவிகளை செய்ய இறைவன் நமக்கு உதவுவானாக.

வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்
abuammaarah@yahoo.com

No comments:

Post a Comment